இருட்டெல்லாம் பார்த்தா 'தொழில்' பண்ண முடியுமா...? திருடப்போனவர்களுக்கு 'கிடைத்த' மறக்க முடியாத பரிசு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எலக்ட்ரிக் குடோனில் திருட சென்ற நபர்கள் மின்சாரம் தாக்கி காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் எல்.என்.டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. சேப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் எல்.என்.டி நிறுவனம் மெட்ரோ பணிக்கு தேவைப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் உபகரணங்களை அந்த குடோனில் தான் வைத்துள்ளது.
இந்நிலையில், நேற்று (09- 12- 2021) அதிகாலை 3 மூன்று பேர் சேர்ந்த கும்பல் அந்த குடோனில் இருக்கும் காவலாளிகளின் பாதுகாப்பையும் மீறி திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்துள்ளனர். அங்கே விலை உயர்ந்த எலக்ட்ரிக்கல் உபகரணங்களை திருட முயன்றனர்.
அப்போது அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடோனுக்கு சென்ற 3 பேரில் ஒருவரான அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 24 வயதான முருகன் அங்கிருந்த ஸ்விட்ச் பாக்ஸில் கைவைத்த போது அவரை மின்சாரம் கடுமையாக தாக்கியது.
சத்யா மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டதோடு அவரின் இரண்டு கைகளும் கருகின. இதனை கண்ட மற்ற இருவர் இங்கிருந்து ஓட முயற்சி செய்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய முருகன் கத்தி கூப்பாடு போட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அங்கு ஓடி வந்து பார்த்தபோது இரண்டு கைகளும் கருகிய நிலையில் முருகன் கீழே கிடந்தார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து திருவல்லிக்கேணி போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் காவலாளிகள்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டு கிடந்த முருகனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு முருகனின் துணையோடு மீதமிருந்த இரண்டு திருடர்களான பாலாஜி, விஜய் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருடப்போன இடத்தில் மின்சார கம்பியில் வைத்து இப்படி சிக்கிக் கொண்டோமே என புலம்பியபடி சென்றுள்ளனர்.
சினிமா பாணியில் திருட சென்று வசமாக சிக்கிக்கொண்ட இந்த சப்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.