'ஒரு வாய் சாப்பாடு கெடச்சுடாதா...' 'பசியோடு அலைந்த விலங்குகளை...' விஷம் வைத்து கொன்ற கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 11, 2020 02:04 PM

உணவின்றி தவித்த விலங்குகள் குப்பை கிடங்குகளில் தஞ்சம் புகுத்த காரணத்தால் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அனைத்து மக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

The brutality of killing poisoned animals without food

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுப்பட்டுரை என்னுமிடத்தில் இயங்கும் குப்பைக்கிடங்கில் விஷம் வைத்து  நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி காலையில் நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் குப்பைகளுடன் குப்பையாக கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர் சுற்றுவட்டார மக்கள். உடனடியாக கால்நடை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, மண்டலக் கால்நடைத் துறை இணை இயக்குநர் மற்றும் குழுவினர் விரைந்துவந்து பார்த்தனர்.

அவர்கள் வந்து சேர்ந்த பிறகும் கூட ஒரு சில விலங்குகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவைகளுக்கு தண்ணீர் மற்றும் முதலுதவிகளைச் செய்தும் எந்த பயனும் இல்லாமல் ஒவ்வொன்றாக அனைவரின் கண்முன்னே 6 நாய், 4 காகம், ஒரு பூனை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை இறந்தன.

இந்த ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும்  சாலையோர விலங்குகள் நாய், பூனை போன்றவையும் காகமும் இதுபோன்ற குப்பை கிடங்குகளில் உணவிற்காக தஞ்சம் புகுகிறது ஆனால் இங்கும் ஒரு சில அரக்க குணம் படைத்த யாரோ சிலர் உணவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர். அவர்கள் யாரென கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

மேலும் இது பற்றி கூறிய கால்நடைத்துறையினர், ``உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு சில விலங்குகளை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மேலும் இறந்த விலங்குகளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொண்ட மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். முடிவுகளின் அடிப்படையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Tags : #ANIMALS