'அது தவறான எச்சரிக்கை.. உடனே நடந்த மாற்று ஏற்பாடு.. பயணிகள் பாதுகாப்பே முக்கியம்'.. விமான நிறுவனம் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 20, 2019 12:25 PM

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற தனியார் விமானத்தில், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது புகை வந்தததாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டது.

scoot airways landed in chennai airport due to emergency

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இயக்கப்பட்டு வருகிறது. டி.ஆர். 567 என்ற எண் கொண்ட இந்த விமானம் இன்று (மே 20, 2019) அதிகாலை  திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 170 பேருடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்டு, சிறிது நேரத்தில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தது.

அப்போது, விமானத்தின் சரக்கு அறையில் இருந்து புகை வெளியேறியதை விமானி கண்டறிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொண்டு விமானி உதவி கேட்டுள்ளார். பின்னர்,  சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஸ்கூட் விமானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர், இன்று (மே 20, 2019) அதிகாலை 3.41 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ஸ்கூட் விமான நிறுவனம், மேற்கண்ட அனைத்து தகவல்களையும் உறுதி செய்தது. ஆனால் அதே சமயம், விமானத்தில் கார்கோவில் இருந்து புகை வெளியேறியதாகக் கூறி, கொடுக்கப்பட்ட எச்சரிக்கை தவறான எச்சரிக்கை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறியுள்ளது. தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. பின்னர் நேற்று மாலை 3.30 மணி அளவில் மாற்று விமானத்தில் பயணிகள் பத்திரமாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நடந்த இந்த சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான கவனத்துக்குரியது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Tags : #FLIGHT #EMERGENCY #PASSENGERS