"அவர் இறந்துட்டாரு.. ஆன்மா பிரியட்டும்னு காத்திருக்கோம்!".. உடன் பிறந்த அண்ணனை உயிருடன் ப்ரீசரில் வைத்த தம்பி.. மீட்கப்பட்ட பின் முதியவருக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம், கந்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணிய குமார், 74. இவரது தம்பி சரவணன், 70, தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்படு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, டாக்டர்கள், பாலசுப்ரமணிய குமார் உயிர் பிழைப்பது கடினம்; வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்' எனக் கூறியதால் அண்ணனை வீட்டுக்கு அழைத்துவந்த சரவணன், அண்ணன் இறந்து விட்டதாக கருதி, 'ப்ரீசர்' பெட்டியை வாடகைக்கு கேட்டு, போன் பண்ணியுள்ளார். நேற்று முன்தினம் காலை, சரவணன் வீட்டிற்கு ப்ரீசர் பெட்டியை கொண்டு வந்த ஊழியர்கள் இறந்தவரின் உடல் இல்லாததை கண்டு, சரவணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், 'உடல் மருத்துவமனையில் உள்ளது. ப்ரீசர் பெட்டியை வைத்து விட்டு மாலை வந்து பிரேதத்தை எடுத்து செல்லுங்கள்' எனக் கூறிஉள்ளார்.
இதனால் ப்ரீசரை வைத்து விட்டு சென்று, மாலையில் ஊழியர்கள் வந்தனர், அப்போது சரவணன், பாலசுப்பிரமணிய குமாரை ப்ரீசர் பெட்டியில் வைத்து, அவரது கை, கால்களை துணியால் கட்டியிருந்துள்ளார். மாலையில் சரவணன் வீட்டிற்கு பெட்டியை எடுக்க வந்த, ஊழியர்கள் ப்ரீசர் பெட்டியில் பாலசுப்பிரமணிய குமார் உயிரோடு உடல் நடுங்கி கொண்டு இருப்பதையும் ஆனால் எழ முடியாத அளவுக்கு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ந்துபோன ஊழியர்கள் வீடியோ எடுத்ததுடன், அவர்கள், சரவணனிடம், 'உயிருடன் உள்ளவரை, பெட்டிக்குள் வைத்துள்ளீர்கள்.. ஒரு மனிதாபிமானம் இல்லையா?' எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு சரவணனோ, 'என் அண்ணன் இறந்து விட்டார். அவரது ஆன்மா பிரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' எனக் கூறிக்கொண்டிருந்துள்ளார்.
ஆனால் மனம் கேட்காத ஊழியர்கள் ப்ரீசர் பெட்டியில் இருந்த முதியவரை மீட்க முயன்றபோது, சரவணன், அவர்களை தடுத்ததால், ஊழியர்கள், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்துவந்த போலீசார் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுபற்றி பேசிய போலீஸார்., பாலசுப்ரமணியம் 12 மணி நேரம், பெட்டியில் நடுங்கிக் கொண்டு இருந்ததாகவும், சரவணன் சற்று மனநிலை பாதித்தவர் என்றும் அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல், இப்படி செய்ததாகவும், இருப்பினும் தங்கை மகள்களிடமும் விசாரிப்பதாகவும் கூறினர். அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் இதுபற்றி பேசும்போது, முதியவருக்கு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாகவும், அதே நேரம், உடலில் அசைவு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை, முதியவர் உயிரிழந்தார்.

மற்ற செய்திகள்
