வரப்போகும் ‘சுற்று வட்டப்பாதை’.. குறையும் ‘பயண நேரம் ’.. சென்னை மெட்ரோ அசத்தல் திட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பயணிகள் இரண்டரை மணிநேரத்தில் சென்னை நகரை சுற்றி வரும் வகையில் புதிய சுற்று வட்டப்பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 45 கி.மீ தொலைவில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிந்தன. அதில் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப்பணிகள் குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் முடிந்து ரயில் சேவை தொடங்கும்போது, சென்னை நகரை சுமார் இரண்டரை மணி நேரத்தில் ஒற்றை ரயில் பயணத்தில் பயணிகள் சுற்றிவரும் விதமாக, சுற்றுவட்டப் பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
அதாவது மாதவரத்தில் மெட்ரோ ரயில் ஏறி சென்னையின் கிழக்கே அடையாறு, மேற்கே கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை 81 கி.மீ தொலைவு வரை சுற்றுவட்டப்பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி தெரிவித்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், ‘மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, சோழிங்கநல்லூா், அடையாறு வழியாக மாதவரத்தை அடையும் வகையில் சுற்றுவட்ட பாதை உருவாக்கப்படும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 7 ரயில்கள் இயக்கப்படும்.
பெரும்பாக்கத்தில் இருந்து (மாதவரம்-சோழிங்கநல்லூா் வழித்தடம்-5) பெரம்பூருக்கு (மாதவரம்-சிப்காட் வழித்தடம்-3) அல்லது தரமணியில் இருந்து (மாதவரம்-சிப்காட் வழித்தடம்-3) திருமங்கலத்துக்கு (மாதவரம்-சோழிங்கநல்லூா் வழித்தடம்-5) பயணிக்க காத்திருக்கும் பயணிகள் இந்த ரயிலில் ஏறலாம்.
இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்கள் போரூா் சந்திப்பில் இருந்து ஒற்றை ரயில் பயணத்தில் பெருங்குடி அல்லது காரப்பாக்கம் உள்பட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நிலையங்களுக்கு செல்ல முடியும். இதன்மூலம் பயணிகளுக்கு பயண நேரம் வெகுவாக குறையும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.