'ஊரடங்கு நேரத்தில் ஜாலியாக சுற்றியவர்கள்'... 'அரசு வேலை, பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறீங்களா'?... வரப்போகும் சிக்கல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 01, 2020 03:31 PM

ஊரடங்கு நேரத்தில் ஜாலியாக சுற்றி காவல்துறையிடம் சிக்கி, வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்குப் பல சிக்கல்கள் காத்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் விரிவாகத் தெரிவித்துள்ளார்கள்.

Problems awaiting for the ones who are all Breaking lockdown rules

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது எனத் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், இளைஞர்கள் பலர் எதையும் பொருட்படுத்தாமல் ஜாலியாக நண்பர்களுடனும் வெளியில் சுற்றி வருகின்றனர். தேவையின்றி வாகனத்தில் சுற்றித் திரியும் நபர்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே 144 தடை உத்தரவை மீறினால் அபராதம் விதிப்பார்கள், கைது செய்து விட்டு விடுவார்கள் எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் உத்தரவை மீறுபவர்கள் மீதான வழக்குகள், காவல்துறையினரின் தொடர் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும் வகையிலேயே உள்ளன. இதனால் வழக்கில் சிக்கியவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலையும் உள்ளதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளார்கள்.

இதுகுறித்து மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறும்போது, ''ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படும் நபர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டம், கொள்ளை நோய்த் தடுப்பு சட்டம், தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்தியத் தண்டனை சட்டம் 188, 269, 271 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்படும். குற்றவாளியாகச் சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்குச் செல்ல முடியாது. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய பாஸ்போர்ட்டு விண்ணப்பிக்கும் போது, அது கிடைக்காமல் போகும்.

அதேபோன்று கல்வி, தொழில், மருத்துவத்திற்காகவும் வெளிநாட்டிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். ஒரு சில தனியார் நிறுவனங்களில் கூட தற்போது வழக்கு குறித்த விவரம் கேட்கப்படுகிறது. அவ்வாறு கேட்கும் பட்சத்தில் தனியார் நிறுவன வேலைக்குச் செல்வதிலும் சிக்கல்கள் ஏற்படும். எனவே இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Problems awaiting for the ones who are all Breaking lockdown rules | Tamil Nadu News.