'ரகசியமா' இதுல அனுப்புங்க... டோர் 'டெலிவரி' பண்றோம்... ஹைலைட்டே 'கார்ல' ஒட்டியிருந்த ஸ்டிக்கர் தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 28, 2020 09:35 PM

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய கடைகளான காய்கறி மற்றும் மளிகை கடைகள் போன்றவை மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கி வருகிறது.

Police from TamilNadu caught a car with 6 litre of drinks

ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகளும் செயல்படாத நிலையில் பல இடங்களில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் ஆறு லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேலம் மாவட்டத்திலிருந்து சாராயம் வாங்கி கொண்டு வந்து ஒரு லிட்டர் சாராயம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும், அதற்கான பணத்தை 'கூகுள் பே' வழியாக முகவரியுடன் அனுப்பினால் சாராயத்தை பணம் செலுத்தியவர்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டு வந்ததும் அம்பலமானது.

இதுவரை சுமார் ஐம்பது பேருக்கு மேல் சாராயம் விற்பனை செய்துள்ள நிலையில் போலீசார் சோதனையில் சிக்காமல் இருக்க காரில் வக்கீல் ஸ்டிக்கர் ஓட்டிக் கொண்டு சுற்றியதும் தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.