'பெட்டிக்கடைக்குள் 4,000 கருக்கலைப்பு'... 'சிக்கிய போலி மருத்துவ தம்பதி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 29, 2019 03:53 PM

பெட்டிக்கடை ஒன்றில் போலி மருத்துவ தம்பதி கடந்த 10 வருடங்களாக, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

illegal abortions in thiruvannamalai husband and wife arrested

அவலூர்பேட்டை சாலையில் பெண் ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்ட போது தம்பதியினர் சட்டவிரோத கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிதா அவலூர்பேட்டை சாலையில் சிறியதாகப் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அவரது கணவர் பிரபு அதேப் பகுதியில் ஆங்கில மருந்துக்கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரபுவும் அவரது மனைவி கவிதாவும் சேர்ந்து பெட்டிக் கடையிலேயே கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர். கலசப்பாக்கம் அடுத்த கடலாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் அங்குள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தொடர் மருத்துவப் பரிசோதனை செய்துவந்துள்ளார். ஆனால், தீடிரென அவர் பரிசோதனை செய்துகொள்வதை நிறுத்தியதை அடுத்து, சுகாதாரத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையில் உள்ள பிரபு-கவிதா தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பிரபுவின் மருந்துக் கடையிலும், மனைவி நடத்தி வந்த பெட்டிக்கடையிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்குக் கருக்கலைப்பு செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகள் மற்றும் கருக்கலைப்புக்குத் தேவையான உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை போலீசார் கைப்பற்றினார். அந்த தம்பதியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்து வந்ததாகவும், தினமும் 3 அல்லது 4 பேர் கருக்கலைப்பு செய்ய வருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட பலருக்கு கருக்கலைப்பு நடைபெற்றுள்ளது. இதுவரை 4 ஆயிரம் சிசுக்களை அழித்தது தெரியவந்துள்ளது. அந்த தம்பதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி உறுதி அளித்துள்ளார். அதோடு சுகாதார இணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருந்துக் கடைகள் அனைத்திலும் சோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #FAKEDOCTORS #ABORTIONS #THIRUVANNAMALAI #ILLEGAL