இனி நான் 'நடந்து' தான் போகணுமா...? 'மீன் விற்கும் மூதாட்டியை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்ட சம்பவம்...' - அதிரடி 'நடவடிக்கை' எடுத்த போக்குவரத்து கழகம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளச்சல் பஸ் நிலையத்தில் மகளிருக்கான அரசுப் பேருந்தில் ஏறிய மீன் வியாபாரம் செய்யும் பாட்டியை மீன்நாற்றம் வீசுவதாக கூறி நடத்துடன் இறக்கிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (65) குளச்சல் பகுதியில் தலையில் மீன் பாத்திரத்தை சுமந்து சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் நாகர்கோவில் மீன் சந்தைக்கு சென்று விற்பனை செய்துவிட்டு மகளிருக்கான இலவச பேருந்தில் இரவில் வீடு திரும்புவார்.
எப்போதும்போல் நேற்று முன்தினம் இரவில் மீன்களை வியாபாரம் செய்துவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் இருந்து கோடிமுனை செல்லும் மகளிருக்கான அரசுப் பேருந்தில் செல்வம் ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்து நடத்துனர் செல்வத்தின் மீது மீன்நாற்றம் வீசுவதாக கூறி பஸ்ஸில் இருந்து வற்புறுத்தி இறங்க வைத்துள்ளார்.
ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பாட்டி செல்வம், குளச்சல் பேருந்து நிலைய அலுவலகம் முன்பாக வந்து கண்ணீர் விட்டு அழுதார். "வயசான என்ன பஸ்ல இருந்து இறக்கி விட்டுட்டாங்க... நாறுது நாறுது, இறங்குன்னு சொல்லிட்டாங்க. இனி வாணியக்குடி வரை நான் நடந்து தான் போணுமா?" என ஆதங்கத்துடன் பயணிகளிடம் புலம்பினார். மேலும் அழுதவாறு பேருந்து நிலைய சுவரிலே சாய்ந்தவாறு நின்றார். இந்த சம்பவத்தை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
வீடியோ வைரலாக பரவியதும், குமரி அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இருவர் பாதிக்கப்பட்ட மூதாட்டி செல்வத்தின் வீட்டில் நேரடியாக சென்று விசாரித்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோது, என் பிள்ளைகள் போன்று அவர்கள், பாதிக்கும்படியாக எதுவும் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். ஆன போதிலும் இந்த சம்பவம் உயர் அதிகாரிகள் வரைக்கும் சென்றதால் முறையான நடவடிக்கையாக ஓட்டுனர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக் காப்பாளர் ஜெயகுமார் ஆகிய மூன்று பேரையும் நேற்று இரவு பணியிடை நீக்கம் செய்து குமரி அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்கொண்ட இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. 1/2
— M.K.Stalin (@mkstalin) December 7, 2021