'நான் ஒரு புறம்போக்கு, பரதேசி'.. 'ஜாலியா இருந்தா உங்களுக்கு ஏன் வயிறு எரியுது?'.. நித்யானந்தா வைரல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 04, 2019 05:36 PM

நாடு முழுவதும் நித்யானந்தா விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள குட்டித் தீவு ஒன்றை நித்யானந்தா விலைக்கு வாங்கியதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் உதவியுடன் தனது தீவுக்கு கைலாசா என்று பெயர் சூட்டப்பட்ட இந்து நாட்டுக்கு, தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐக்கிய நாடுகள் சபையை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

nithyananda releases new video against his allegations

இந்நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனக்கும்  தனது பீடத்துக்கும் எதிராக சர்வதேச சதி பின்னப்படுவதாக குற்றம் சாட்டிய நித்யானந்தா, இத்தனைக்கும் நடுவில் தான் உயிரோடு இருப்பதற்குக் காரணம், பரமசிவனும், பராசக்தியும், காலபைரவரும் தனக்காக பெர்சனலாக களத்தில் இறங்கி தன்னை நேரடியாக பாதுகாப்பதே என்று கூறியுள்ளார். தன்னை விமர்சனத்தால் தாக்கும் பலருக்கும்,  ‘என்ன ஆனாலும் தினம் ஒரு கெட்டப்பை போட்டுகிட்டு ஜில்ஜில் என குறையே இல்லாமல், கலகலனு இருக்கேன்’ என வயிறு எரிவதாகக் குறிப்பிட்ட நித்தி,  ‘என்னால் இருக்க முடிகிறது, முடிஞ்சா நீ ஜாலியா இருந்துக்கோ, பரமசிவன் குடுக்குறான் ஆனந்தமா இருக்கிறேன்’ என்று பேசியுள்ளார்.

மேலும் பேசிய நித்யானந்தா, தன்னைப் போன்ற புறம்போக்கை எல்லாம் பயமுறுத்த முடியாது என்று கூறியதோடு,  ‘நான் ஒரு புறம்போக்கு.. என்னை யாரும் உரிமை கொண்டாட நான் விட மாட்டேன்’ என்றும்  ‘நான் ஒரு பரதேசி.. நானும் யாரையும் உரிமை கொண்டாட மாட்டேன், பரத்தை மட்டுமே தேசமாகக் கொண்டவன்’ என்று பேசிய நித்யானந்தா புறம்போக்கு, பரதேசி உள்ளிட்ட வார்த்தைகளுக்கு புதிய விளக்கத்தை கொடுத்துவிட்டதாக புளங்காகிதப் பட்டு தனக்குத் தானே சிரித்துக்கொள்கிறார்.

இறுதியில், வடிவேலுவின் சூனா பானா காமெடி காட்சியில் வருவதுபோல, ‘பஞ்சாயத்து முடிஞ்சிச்சு கெளம்பு.. கெளம்பு.. அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல’ என்று கூறியுள்ளார்.  இன்னொருபுறம் நித்யானந்தாவின் இருப்பிடத்தை போலீஸார் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #NITHYANANDA