'இடம் கொடுத்த பள்ளி முதல்வர் மீது பாய்ந்த சட்டம்'.. ஆசிரம நிர்வாகிகள் கைது!.. 'தப்பியோடினாரா நித்தி?'...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Nov 21, 2019 06:51 PM
நித்யானந்தாவுக்கு ஆசிரமம் அமைக்க நிலம் கொடுத்ததாக அகமதாபாத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நித்யானந்தாவால் நேரடியாக நிர்வகிக்கப்படும் ஆசிரமங்களுள் ஒன்றுதான் குஜராத் அஹமதாபாத் ஹத்திஜன் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு 50க்கும் மேற்பட்ட வளரிளம் பெண்கள் அடைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா, தனது 4 மகள்களை நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் சேர்த்ததாகவும், பின்னர் 2 பேர் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பின் அவரது மகள்கள் 4 பேரில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 மகள்களை, நித்யானந்தா பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டினார் சர்மா. இந்த நிலையில் சர்மாவின் இன்னொரு மகள், நித்யானந்தா ஆசிரமம் பற்றிய சில உண்மைகளை நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
முகத்தை மறைத்துக் கட்டிக்கொண்டு பேட்டி அளித்த அப்பெண், தங்களுக்கு கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவை, அநாகரிகமாக பேசச் சொன்னதே நித்யானந்தாதான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனிடையே புகாரின் பேரில் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த ப்ராணப் பிரியா, பிரிய தத்துவா ஆகிய நிர்வாகிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.