NEEYA NAANA : "என் அப்பா தோக்கல.." - மகளின் இதயம் வென்ற தந்தை.. பாதி நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத்தின் நெகிழ்ச்சி செயல்.! TRENDING
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
Also Read | "7-வல அப்பா இறந்துட்டாரு.. வீட்ல 3 பொண்ணுங்க".. - வெறியுடன் படித்த மாணவி.. உருகிய சிவகுமார் & கார்த்தி.!
இந்த நிகழ்ச்சியின் அண்மை டாப்பிக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் Vs குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட கணவர் ஒருவர் தன்னுடைய சம்பாத்தியம், தொடர்ச்சியான தொழில் தோல்விகள் உள்ளிட்டவற்றால் தனக்கு சுற்றத்தாரிடம் மரியாதை குறைகிறது என்று வருந்தி பதிவு செய்கிறார். இது குறித்து அவருடைய மனைவி குறிப்பிடும் பொழுது தன் குடும்பத்தினர் தன் கணவரிடம் பேச்சுவார்த்தை கூட வைத்துக் கொள்வதில்லை என்றும், தன் வீட்டார் போட்ட நகைகளை கூட கணவர் அடகு வைத்து விட்டார் என்பதால் அவர்கள் முகம் பார்த்தால் கூட பேசுவதில்லை, எந்த விசேஷத்திற்கும் அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதே போல், “மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை நான் கையெழுத்து போட முடியாமல் மனைவி கையெழுத்து போட்டு விடுகிறார்” என்று அந்த கணவர் ஆதங்கத்தை முன்வைக்க, “அதற்கு காரணம் கணவர் கல்வி பின்புலம் இல்லாதவர் என்பதால் அவருக்கு அது புரிவதும் இல்லை. வெகுநேரம் அந்த ரிப்போர்ட்டையே பார்த்துக் கொண்டிருப்பதால் நான் சீக்கிரம் கையெழுத்து போட்டு விடுவேன் என்பதுதான்” என்று குறிப்பிட்டார். அதற்கு காரணம் சொன்ன அந்த கணவரோ, “நான் படிக்கவில்லை. என்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும், பெரிய ஆளாக ஆக வேண்டும். 10 மார்க் தாண்டி நான் பெரிதாக மார்க் எடுத்ததில்லை. எனவேதான் அவள் எடுத்த மார்க்கை அப்படி வியந்து பார்ப்பேன். அவள் நன்கு படிக்க வேண்டும். அவளுடைய பள்ளிக்கட்டணத்தை முதல் கொண்டு நானே தான் கட்டுகிறேன். ஏனென்றால் நான் தான் அதை செய்ய வேண்டும், அவளுடைய படிப்பு முழுக்க என்னுடைய உழைப்பில் உருவாக வேண்டும், அவளுடைய கனவு சாத்தியப்பட வேண்டும், அதற்கு நான் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று உணர்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் பேசியதை அரங்கமே உறைந்து பார்த்தது.
இதனை தொடர்ந்து எப்போதும் ஷோ முடிவில் தரக்கூடிய சிறப்பு பரிசை கோபிநாத் உடனடியாக பாதி நிகழ்ச்சியிலேயே வரவழைத்து அந்த பரிசை இந்த தம்பதியரின் மகளை அழைத்து அந்த குட்டி பெண்ணின் கையில் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கச் சொன்னார். அந்த பெண்ணோ, “என் அப்பா தோற்கவில்லை. எனக்காக தான் கஷ்டப்படுகிறார், என்னுடைய அப்பாவுடைய ஆசை, நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான்.. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஆசை.. என்னுடைய அப்பாவிடம் பேசாத சுற்றத்தாரிடம் நானும் பேசமாட்டேன்.. என் அப்பா தோற்கவில்லை” என்று அழுதபடி பேசுகிறார்.
காண்போரை கண்கலங்க வைத்த இந்த விவாத நிகழ்ச்சியின் இந்த குடும்பம் தற்போது தமிழ்நாட்டின் எதார்த்தமான, அதேசமயம் எவ்வளவு எளிமையான நிலையிலும் சிறிய சிறிய மனித மதிப்பீடுகளை முதல் நிலையாக வைத்து வாழக்கூடிய குடும்பம் என்றும் அனைவரும் இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தன் தந்தையை இவ்வளவு தூரம் புரிந்து வைத்துக் கொண்ட அந்த குழந்தைக்கும், தன் குழந்தைக்காக எந்த கல்வி பின்புலமும் பண பலமும் இல்லாத ஒரு தந்தையின் இந்த பேச்சும் பலரையும் உருக்கி இருக்கிறது.