'ஊரடங்கில் வரப்போகும் கூடுதல் தளர்வுகள்'... 'டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு'?... அதிகாரிகள் வழங்கியுள்ள பரிந்துரைகள் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிய நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு வருகிற 14-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆகக் குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் அதிகாரிகள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்த நீட்டிப்பின்போது, 27 மாவட்டங்களில் நடைப்பயிற்சிக்கு அனுமதி உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத வழிபாட்டுக்கூடங்களுக்கு அனுமதி இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
