'சென்னையிலிருந்து காலி பண்றோம்'...'தமிழகத்தின் முக்கிய பகுதிக்கு செல்லும் ஐடி நிறுவனங்கள்'... இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாடகை மற்றும் நிர்வாகச் செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னையிலிருந்து காலி செய்ய சில ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் வளாகமானது கடந்த 2010-ம் ஆண்டு திருச்சி அருகேயுள்ள நவல்பட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 147.61 ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் சதுர அடியில் தொழில்நுட்ப தகவல் மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சாலை வசதியின்மை, பேருந்து போக்குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பிரபல ஐ.டி நிறுவனங்கள் இங்கு வர மறுத்தன. இதன் காரணமாகப் பெயரளவுக்கு மட்டும் சில ஐடி நிறுவனங்கள் இங்குச் செயல்பட்டு வந்தன.
இந்தச்சூழ்நிலையில் திருச்சி- புதுக்கோட்டைத் தேசிய நெடுஞ் சாலையிலிருந்து நவல்பட்டு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது. அதுபோன்று தகவல் தொழில்நுட்ப மையத்தின் உள்ளே தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை இங்கு அமைத்தது. இதன் காரணமாக இக்கட்டிடத்தில் உள்ள 60,000 சதுர அடி இடங்களும் நிரம்பின.
இதற்கிடையே தற்போது கொரோனா காரணமாக பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளது. அரசு அறிவித்த தளர்வுகளுக்குப் பின்பு மெல்ல மெல்ல நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பணியாளர் ஊதியம், வாடகை மற்றும் நிர்வாகச் செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சென்னையிலிருந்து தங்களது அலுவலகங்களை திருச்சி நவல்பட்டு ஐடி பார்க்கிற்கு மாற்றி விடலாம் என முடித்துச் செய்திருந்தது. ஏற்கனவே ஏராளமான நிறுவனங்கள் விண்ணப்பித்தும் இருந்தது.
இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாகச் சென்னையில் இருக்கும் மேலும் பல நிறுவனங்களும் திருச்சிக்கு இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐ.டி பார்க்கை விரிவாக்கம் செய்யக் கூடுதலாகக் கட்டிட வசதி தேவைப்பட்டது. இதற்காக எல்காட் நிர்வாகம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.42.26 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம், 1.13 லட்சம் சதுர அடியில் தரைதளம் மற்றும் 4 மாடிகளைக் கொண்டதாக அமைய உள்ள இப்புதிய கட்டிடத்தின் பணிகளை விரைவில் தொடங்கி, 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க பொதுப்பணித்துறையின் கட்டுமான பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். புதிதாகக் கட்டப்படவுள்ள கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 நிறுவனங்கள் வரை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
