இதுவரை 25 லட்சம் ‘பக்தர்கள்’... அலை அலையாய் ‘படை’யெடுக்கும் மக்கள் வெள்ளம்... யார் இந்த ‘அத்திவரதர்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 19, 2019 01:50 PM
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இத்தனை நாட்கள் பெரிதாக அறியப்பட்டாலும், தற்போது அத்தி வரதரால் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயிலின் மூலவராக வரதராஜப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் உள்ளனர். திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோயில் என்றால், அது காஞ்சிபுரத்தை குறிக்கும் அளவுக்கு இக்கோயில் சிறப்பு வாய்ந்தது. வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம் தான் அத்திவரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது, வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர், பழைய சீவரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் தான் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலின் ஆதி மூர்த்தியாக இருந்தவர், பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்ட அத்திவரதர். அவர்தான், அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் உள்ள நான்குகால் மண்டபத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளிகிறார். புராணக் கதைகளின்படி, தற்போது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் அத்திவனத்தில், அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு, தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு, வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.
இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக, யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி, வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் கொண்டார். இதனால் சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். அதன்பிறகு, காயத்ரி, சாவித்ரி துணையுடன், பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பின்னப்பட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு, பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் அருளியதாக புராணம் கூறுகிறது.
தன் யாகத்தை காத்த பெருமாளின் திருவடிவத்தை, தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைக்க வைத்தார் பிரம்மர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார் என்கிறது புராணம். வேள்வித் தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில், புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை, குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். அத்திவரதர் உள்ள, இந்த திருக்குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றுவதில்லை.
மேலும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பகைமை இருந்த காலத்தில், அத்தி வரதரை பகைவர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மண்ணில் குழி தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி அத்தி வரதரை மறைத்து வைத்து, பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல் மொகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், அத்தி வரதரை மறைத்து வைப்பதற்காகவும், குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. புராண நம்பிக்கையின் பேரில், கடந்த 18-08-1854, 13-06-1892,12-07-1937, 02-07-1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் தொடங்கியது.
தற்போது 40 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள், அத்திவரதர் திருவிழா நடைப்பெற்று வருகிறது. அத்தி வரதரை தரிசிக்க, மொத்தம் 48 நாட்கள் என்றால், அதில் 24 நாட்கள் சயனக் கோலத்திலும், 24 நாட்கள் நின்றக் கோலத்திலும் காட்சியளிக்க உள்ளார். குளத்தில் இருக்கும் அத்தி வரதர் சிலை 9 அடி உயரம் கொண்டதாக உள்ளது. புகழ்பெற்ற அத்தி வரதரை இதுவரை 25 லட்சம் பக்தர்கள் வரை தரிசித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது, உலகெங்கிலும் காணும் பக்தர்கள், அலை, அலையாய் அத்தி வரதரைக் காண வந்து செல்கின்றனர்.