'திடீரென அலறிய சிறுவன்'... 'காது வழியாக வந்த கம்பி'... 'கண்ணு ஒண்ணும் இல்லடா'... வாவ் போட வைத்த அரசு மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தற்போதைய கொரோனா நேரத்தில் அரசு மருத்துவர்களின் சேவையை நாடே பாராட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், தக்க சமயத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி பலரது பாராட்டை அரசு மருத்துவர்கள் பெற்றுள்ளார்கள்.

திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ரிதிகேஷ்வரன். 7 வயது சிறுவனான இவன், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அதே போன்று நேற்று முன்தினம் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டில் கட்டும் போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தான்.
அப்போது கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி கம்பி அவனுடைய வலது கழுத்து பகுதியில் குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது பெற்றோர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரிதிகேஷ்வரனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அங்குச் சிறுவனைக் குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்து சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர். அப்போது சிறுவனின் கழுத்து பகுதியில் குத்தி இருந்த கம்பி 12 மி.மீ. அகலமும், 2 அடி நீளமும் உள்ள கொக்கி கம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட மருத்துவர்கள், உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொக்கி கம்பியை அகற்ற முடிவு செய்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ், மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ரங்கராஜன் தலைமையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி நல்ல நிலையில் உள்ள நிலையில், அவனது புகைப்படத்தையும் மருத்துவர்கள் வெளியிட்டார்கள். தக்க நேரத்தில் விரைந்து செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குச் சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்
