சமகால வரலாற்றின் மிகப்பெரிய போரினை உக்ரைன் மீது தொடுத்திருக்கிறது ரஷ்யா. சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் ஊடுருவியுள்ளனர். உக்ரைனின் வான், கடல் மற்றும் தரை என அனைத்து வழிகளிலும் ரஷ்யாவின் படைகள் நுழைந்துவிட்டன. விமான நிலையம், போக்குவரத்து அமைப்புகள் என உக்ரைனின் முக்கிய பகுதிகளை பிடிக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது.
நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. மேலும், சர்வதேச சந்தையின் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31-ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 98 டாலரில் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. போர் நீடிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போரால் தங்கம், வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ. 4,827-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,600க்கு விற்பனை ஆனது.
தங்கம் விலை சரிவு
இந்நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்து உள்ளது. சவரனுக்கு 1200 ரூபாய் இன்று குறைந்துள்ளதால் மக்கள் இன்று தங்கம் வாங்க ஆயத்தமாகி வருகிறார்கள். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 4,801 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து, 38,408 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வீழ்ச்சி கண்ட வெள்ளி விலை
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 7.70 ரூபாய் குறைந்து, 65 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 650 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 7,700 ரூபாய் குறைந்து, 65,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.