எகிறும் பெட்ரோல், டீசல் விலை.. ரஷ்யா - உக்ரைன் போரால் நடைபெற இருக்கும் விபரீதங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே இப்போது ரஷியா - உக்ரைன் போர் குறித்த நடவடிக்கைகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது. என்ன ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் ரஷிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகளுக்கு தக்க பதிலடி தரப்படும் எனவும் புதின் எச்சரித்துள்ளார்.
தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை
தாக்குதல்
நவீன காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்படும் இதனை தற்போது துவங்கி பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறது ரஷ்யா. சற்று நேரம் முன்னர், உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார்.
உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தும் ரஷ்யா, அதனை கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக உக்ரைன் மீது போரை துவங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய அழிவை நோக்கி செல்லும் என உலக தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு
ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31-ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 98 டாலரில் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. போர் நீடிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
அடிவாங்கிய பங்கு சந்தை
இன்று காலை 9.54 மணியளவில் சென்செக்ஸ் 1,936 புள்ளிகள் சரிந்து 55,296 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. அதேபோல் நிஃப்டி 572 புள்ளிகள் சரிந்து 16,491 புள்ளிகள் என்றளவில் வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 காசுகள் சரிந்து 75.07 என்றளவில் உள்ளது.
தங்கம் விலை உயர்வு
ரஷ்யா - உக்ரைன் போரால் தங்கம், வெள்ளி விலை உயரத் துவங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ. 4,827-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,600க்கு விற்பனையாகிறது.
வேறு எந்தெந்தெப் பொருட்கள் எல்லாம் விலை ஏறும்?
இந்தியாவில் ஆண்டு தோறும் இறக்குமதியாகும் சூரிய காந்தி எண்ணெய்யில் 70 சதவீதம் உக்ரைன் நாட்டில் இருந்து வருகிறது. நடைபெறும் போரால் இந்த இறக்குமதி பாதிக்கப்படும். இதன்காரணமாக சூரிய காந்தி எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியா தனது 50 சதவீத எரிவாயு தேவையை உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) மூலம் பூர்த்திச் செய்கிறது.
போர் காரணமாக இயற்க்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம்.
இதுமட்டுமல்லாமல், கோதுமை உற்பத்தியில் ரஷ்யா முதல் இடத்திலும் உக்ரைன் நான்காவது இடத்திலும் உள்ளன. நடைபெற்றுவரும் இந்தப் போரின் காரணமாக, கோதுமையின் விலை உலகளவில் ஏறலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், வாகன உற்பத்தி, செல்போன் தயாரிப்பு ஆகியற்றையும் இந்தப் போர் கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இப்படி, நேரடியாகவும் மறைமுகமாகவும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையால் உலகமே மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
உக்ரைன் மீது தாக்குங்கள்.. போரை அறிவித்த ரஷ்யா.. புதின் உத்தரவால் பெரும் சிக்கல்