‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்!’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன? - முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மிக மோசமான நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் அவருக்கு ECMO அதாவது எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் என்கிற சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு உண்டாவது போன்ற சமயங்களில் இதய செயல்பாடு பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இக்கருவியை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
வழக்கமாக மாரடைப்பு உண்டானால், செயற்கை சுவாச உதவியுடன் மார்பை அழுத்தி முதலுதவி செய்து இயங்கவைக்கும் மரபு வழி சிகிச்சைக்கு பலன் இல்லாதபோது இந்த எக்மோ சிகிச்சை கருவி உயிர் காக்கும் முயற்சிக்கு உதவும்.
இது நரம்பில் இருந்து ரத்தத்தை பிரித்து, அதில் ஆக்ஸிஜனை சேர்த்து கார்பன்-டை-ஆக்ஸைடை நீக்கும் வேலையை செய்வதுடன், ரத்தத்தை லேசாக உஷ்ணமாக்கி ரத்தக்குழாய்க்கு அனுப்பும்.
ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும் வேலையையும் இந்த எக்மோ செய்வதால் இருதயம் மற்றும் நுரையீரலை ரத்தம் பைபாஸ் செய்ய முடிகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதே இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான அடுத்த கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய கட்டம் வரையில் இந்த எக்மோ கருவி பலனளிக்கும். ஒருவேளை எக்மோ கருவி பலனளிக்காதபோது, இதயமாற்று அறுவை சிகிச்சை அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.