"எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல".. 3ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடிதம்.. மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நெகிழ்ச்சி அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது பள்ளியில் போதிய இட வசதி இல்லை என தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு மூன்றாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார். இதனையடுத்து அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் அறிவித்திருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Also Read | மாயாஜால மைதானம்.. மேட்ச் முடிஞ்சதும் காணாமல்போக இருக்கும் ஸ்டேடியம்.. FIFA உலகக்கோப்பையில் சுவாரஸ்யம்..!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வினை தீர்த்த நாடார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் ஆராதனா. இவர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தான் படித்து வரும் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை எனவும் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதன் காரணமாக தனது பெற்றோர் வேறு ஊரில் உள்ள தனியார் பள்ளியில் தன்னை சேர்க்க இருப்பதாகவும் ஆனால் தனக்கு இந்த ஊரிலேயே படிக்க விருப்பம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் பேசுகையில்,"வினை தீர்த்த நாடார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் ஆராதனா என்னும் சிறுமி சமீபத்தில் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை என குறிப்பிட்டு வகுப்பறைகளை உருவாக்கித் தர கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கு பெருமையாக இருந்தது. என் மீது அவர் எவ்வளவு நம்பிக்கையை வைத்திருந்தால் எனக்கு இப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதி இருப்பார்? அந்தக் குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்த மேடையிலேயே அறிவிக்கிறேன். முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். மேலும் சிறுமி ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையவும் நான் வாழ்த்துகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
தான் படிக்கும் பள்ளியில் இட வசதி இல்லை என முதல்வருக்கு கடிதம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த சிறுமி ஆராதனாவிற்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read | மாண்டஸ் புயல்: இந்த நேரத்துல மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.. போக்குவரத்து கழகம் தகவல்..!

மற்ற செய்திகள்
