துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து... முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை!.. "மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும்... 'இது' நடப்பது உறுதி"!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட இ.பி.எஸ் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது தமிழக மக்களுக்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், பாஜக வேட்பாளரும், முன்னாள் மத்தியமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும், இ.பி.எஸ் வாக்கு சேகரித்தார்.
அதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் 3ஆவது முறையாகப் போட்டியிடும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் இ.பி.எஸ் புகாழரம் சூட்டினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த இ.பி.எஸ், 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவசமாக ஓட்டுநர் பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்தம் வாழ்வு தழைத்தோங்கவும், அதிமுக அரசு அயராது பாடுபடுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவளம் பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படாது என்றும், அத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் திரும்ப பெறப்பட்டதாக முதல்வர் இ.பி.எஸ் கூறியுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை, நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா ஆகியோரை ஆதரித்தும், முதல்வர் இ.பி.எஸ் பரப்புரை மேற்கொண்டார்.