'திருநங்கைகள்' தான் 'டார்கெட்'... 'காதல் வார்த்தை' பேசி கரைக்கிறதுல கில்லாடி!' - கடைசியில் மாட்டிக்கொண்ட 'கப்பல் அதிகாரி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டுள்ளது.
திருநங்கை பிரியங்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ தான் ஆசைப்படுவதாக முகமது உசேன் தெரிவித்துள்ளார். மேலும், தான் கப்பலில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர். அப்போது, பிரியங்காவின் செல்போன் மற்றும் டெபிட் கார்டுகளை உசேன் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதன்மூலம் அவ்வப்போது பிரியங்காவின் வங்கிக் கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்து மொத்தமாக சுமார் 2 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பிரியங்கா, உசேனிடம் கேட்ட போது, பிரியங்காவுடனான தொடர்பை உசேன் துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரியங்கா, கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் உசேன் மீது புகாரளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்னும் பகுதியில் யுவஸ்ரீ என்ற திருநங்கை கடந்த வாரம் மண்ணெனய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் தற்கொலை தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியுள்ள நிலையில், அதில் பிரியங்காவை ஏமாற்றிய முகமது உசேன் தூத்துக்குடி திருநங்கை யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்த முகமது உசேனை அமைந்தகரை போலீசார் மோசடி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடியில் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
மேலும், யுவஸ்ரீ கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இரண்டு திருநங்கைகளை காதலிப்பது போல் ஏமாற்றி வாலிபர் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.