'வந்துட்டே இருக்காங்க...' 'இ-பாஸ் தளர்வான உடனே...' - சென்னையில் 'ஒரே நாளில்' வந்து குவிந்த பயணிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இ-பாஸ் தளர்வுகள் அறிவித்த பின் முந்தைய நாட்களை விட பல மடங்கு பயணிகள் வருகை தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் வேகமாக கொரோனா பரவியது முதல் சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து மே-24 ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின் மே மாதம் 25-ஆம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையிலான உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டன.
கொரோனா ஊரடங்கால் மற்ற இடங்களில் தவித்து வந்த மக்களை காப்பாற்ற மேலும் சில விமானங்களும் இயக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலையில் சென்னை விமான நிலையத்திற்கு சுமார் 1,45,671 பேர் வந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய மாதத்தை விட 6.6 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மட்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுமார் 7,500 பேர் பயணம் செய்துள்ளனர். இதற்கு காரணம் நேற்று அறிவிக்கப்பட்ட இ-பாஸ் தளர்வுகள் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் கடந்த இரண்டரை மாதங்களில் இன்றுதான் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இ-பாஸ் தளர்வுகளால் வரும் காலங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.