'சென்னையில் இந்த பகுதியில இருக்கீங்களா'... 'மக்களே கவனம்'... 'கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடம்'...அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 800 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த தெருவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது.
தற்போது ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வேகமாகப் பரவுகிறது. இதனால் அவர்களோடு தொடர்பில் உள்ள உறவினர்களுக்கோ, அருகில் உள்ள குடும்பத்தினருக்கோ வைரஸ் பரவி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த ஆண்டு இருந்தது போலக் கட்டுப்பாடு பகுதிகள் முடக்கப்படுவது இல்லை. எவ்வித அறிவிப்புப் பலகையோ, தகரமோ அடித்து வேறுபடுத்திக் காட்டுவது இல்லை.
ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவருக்குத் தொற்று பரவினால் தற்போது மாநகராட்சி மூலம் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அத்தெரு மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு அதிகமான கட்டுப்பாடு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஒவ்வொரு தெருக்களையும் வார்டு வாரியாக கண்காணித்து வருகிறது.
சென்னையில் 300, 400 கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருந்த நிலையில் தற்போது 826 தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா எந்த அளவிற்கு வேகமாகப் பரவுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறித்து ஊழியர்கள் கேட்டறிந்து வருகிறார்கள்.
எந்த தெருவில் பாதிப்பு அதிகம் வருகிறது என்பதைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்துகிறார்கள். அதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
