'நான் உங்கள பயமுறுத்தல'... 'ஊரடங்கு இல்லைன்னுசொல்ல முடியாது, ஆனா'... உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு குறித்த முக்கிய தகவலை உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு அன்றாடம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது அம்மாநில மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மக்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக கொரோனா நிலவரம் பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
அதில், ''இன்று ஒரே நாளில் எனக்குப் பல தொலைப்பேசி அழைப்புகள் வந்துவிட்டன. அத்தனையும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலுக்கு வருகிறதா என்ற விசாரணையாகவே இருந்தன. முதலில் நான் உங்களைப் பயமுறுத்த விரும்பவில்லை. உண்மை நிலவரம் என்னவென்பதை மட்டுமே உங்களிடம் சொல்லப் போகிறேன்.
நாம் அனைவரும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி ஓராண்டு ஆகி விட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா கட்டுக்குள் வந்து நமக்கு நிம்மதி கொடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மார்ச் மாதத்திலிருந்து கொரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. முன்பைவிட வீரியமாகப் பரவல் இருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வருகிறதா என்பது குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை. ஆனால், நிலவரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு தொற்று தொடங்கியபோது நமக்கு 2 பரிசோதனைக் கூடங்களே இருந்தன. இப்போது 500 கோவிட் பரிசோதனை மையங்கள் உள்ளன. மும்பையில் மட்டுமே தினமும் 50000 பேருக்குப் பரிசோதனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 1.82 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்படுகிறது.
சூழ்நிலை காரணமாகக் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அது தொடர்பான அறிவிப்புகள் வரும். நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாற்றுத் தீர்வு ஏதேனும் கிடைக்குமா என ஆராய்ந்து வருகிறேன். இன்று நான் முழு ஊரடங்கு குறித்த சொல்லிவைக்கிறேன். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்னும் இரு தினங்களில் மாற்றம் வந்தால் ஊரடங்கு தவிர்க்கப்படும்.
உலகளவில் கொரோனா மூன்றாவது அலை வந்துவிட்டது. இன்னும் அடுத்தடுத்த அலைகள் வராமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னைக் கருதுங்கள். உங்கள் நலன் காக்க வேண்டியது எனது கடமை. விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கடந்த ஆண்டு ஒத்துழைத்தது போல் நீங்கள் இப்போதும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். மருத்துவ வசதிகளை நல்குவதில் மகாராஷ்டிர அரசு ஒருபோதும் சறுக்காது'' என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
