'அவ தான் எங்க மகராசி'...'கொரோனா இருக்குமோன்னு செக் பண்ண போனா'... 'நொறுங்கிப் போன பெற்றோர்'... 'சென்னையில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சத்தில் குழந்தையைப் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வீட்டிலிருந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். 3 வயதாகும் மகள் ஆதிரா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த சுப்பிரமணியம், கொரோனா அச்சத்தின் காரணமாக, வீட்டின் வெளியே விளையாடக் கூட அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் ஆதிராவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
மகளுக்கு காய்ச்சல் வந்ததும் உடைந்து போன சுப்பிரமணியம், உடனடியாக மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆதிராவை அனுமதித்துள்ளார். இருப்பினும் அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் அந்த மருத்துவமனை மருத்துவர்களும் கைவிரித்தனர். இதனால் ஆதிரா நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குக் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆதிராவின் பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆதிரா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஆதிராவின் உடலைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள். உயிருக்கு உயிராக வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கொரோனா அச்சத்தினால் மக்கள் பீதியில் உள்ள நிலையில், டெங்குகாய்ச்சலுக்கு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
