கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்... அதிகாரிகள் கண்ணில் 'மண்ணைத்தூவி'... வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் வெளிநாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இறப்பு விகிதம், குணமடைபவர்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும் கூட கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அயராது உழைத்து வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா உறுதியான பெண் ஒருவர் துபாய்க்கு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த 30 வயது பெண் ஒருவர் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பத்திரப்பதிவு நடைமுறைக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார்.
அவர் வந்த சில நாட்களில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அவர் மீண்டும் திரும்பி செல்ல முடியவில்லை. இதற்கிடையில் அவர் வசித்து வந்த குடியிருப்பு பகுதியில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதோடு அவருக்கும் கடந்த 12-ம் தேதி கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி மருந்து வாங்க செல்வதாக வெளியில் சென்ற அந்த பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் விசாரணை நடத்த , அப்போது தான் மும்பையில் இருந்து சென்ற சிறப்பு விமானத்தில் அவர் வெளிநாடு தப்பிச்சென்ற விவரம் தெரிய வந்துள்ளது.
மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்ற அப்பெண் சார்ஜா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் தனக்கு அப்போது கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண் மீது கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாடு தப்பிச்சென்ற குற்றத்திற்காக சுகாதாரத்துறையினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து அவர் வெளிநாடு செல்ல உதவியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
