'ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு’... ‘ப.சிதம்பரம் கைது?’... 'டெல்லியில் பரபரப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 21, 2019 10:33 PM
ஐ.என்.எக்ஸ். மீடியா பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் உள்ள ஜோர் பாக் இல்லத்திலிருந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரை, நாளை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், `ஜனநாயகம், சுதந்திரத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. பொய்யர்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். 7 மாதங்களுக்குப் பின், எனது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உயர் நீதிமன்றம் நிராகரித்ததால் எனது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சட்டத்தின் பிடியில் இருந்து நான் தப்பிக்க முயல்வதாகக் கூறுவதை எதிர்க்கிறேன். நீதிமன்ற உத்தரவை நான் மதிக்கிறேன். சட்டத்தையும் மதிக்கிறேன். அதேபோல், விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்கும் என நம்புகிறேன்' என்றார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைய முற்பட்டனர். அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒரு பகுதியினர் சுவர் ஏறிக்குதித்து பின்பக்கம் வழியாக நுழைந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை அழைத்துச் சென்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன. டெல்லி உயர் நீதிமன்றம், அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. பின்னர், உச்ச நீதிமன்றத்தை நாடினார் ப.சிதம்பரம். அவரது வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH Police remove the two men who jumped onto the car in which Congress leader P Chidambaram was being taken to the CBI headquarters today. #Delhi pic.twitter.com/8buFkAY26U
— ANI (@ANI) August 21, 2019
#WATCH A team of Enforcement Directorate arrives at the residence of Congress leader P Chidambaram at Jor Bagh in Delhi. pic.twitter.com/Wew3FrNGcg
— ANI (@ANI) August 21, 2019