'ஆப்பிள் நிறுவனத்துக்கு சென்னை மீது காதல்'... 'பாஸ் இனி மேட் இன் சீனா இல்ல, மேட் இன் சென்னை'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். ஐபோன் வைத்திருப்பதைச் சற்று மதிப்பு மிக்கதாகச் சிலர் பார்ப்பதும் உண்டு. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதை உபயோகிக்கும் முறை மற்றும் அதிலுள்ள கேமரா மற்றும் இன்ன பிற வசதிகள். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு சாதாரண காரை ஓட்டுவதற்கும், பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற காரை ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் எனக் கூறலாம். விலை அதிகமாக இருந்தாலும், ஐபோனை கண்டிப்பாக வாங்கி விட வேண்டும் எனப் பலரும் நினைப்பது உண்டு.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு நிச்சயம் ஐபோன் காதலர்களுக்கு ஒரு நற்செய்தியாகவே இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடலை சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே ஐபோன்களைத் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கியது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதி வரிகள் தவிர்க்கப்படுவதோடு, பல்வேறு செலவுகளும் குறைகிறது.
இதனால் இந்தியச் சந்தையில் ஐபோன்களின் விலையும் குறைந்தது. இந்த சூழ்நிலையில் டாப் லெவல் ஐபோன் மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அதிலும் சென்னையில் உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஐபோன் 11 மாடல் உற்பத்தி பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் இதற்காகச் சீனாவைச் சேர்ந்திருக்கும் நிலை குறையும் எனவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் ஆப்பிள் ஐபோன் 11 மாடல் விலை இந்தியாவில் ரூ.62,900 - ரூ.73,600 என்ற அளவில் உள்ளது.
சென்னையில் ஐபோன் 11 மாடல் உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான விஸ்ட்ரானின் ஆலை பெங்களூருவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.