
'இரவு 10 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு'... 'தேவையில்லாமல் பைக், காரில் சுற்றினால் என்ன நடக்கும்'... சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்.
இதுதொடர்பாக பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், "இன்றிலிருந்து இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. எதற்கெல்லாம் அனுமதி உண்டு, எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை காவல்துறையினர் செயல்படுத்த உள்ளனர். இரவு முழு ஊரடங்கு பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை சாவடிகள் அமைத்துக் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய சாலைகளில் காவல்துறை வாகன சோதனை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மேம்பாலங்கள் மூடப்படும். இன்று இரவு 10 மணிக்கு இரவு ஊரடங்கு தொடங்கி விடும். 10 மணிக்கு வாகன சோதனைகளைத் தொடங்கி விடுவோம்.
இரவு முழு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழை வைத்திருந்தால் போதும். காவல்துறையினரிடம் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். இரவு ரோந்து தீவிரப்படுத்த உள்ளோம்.
ஊரடங்கு சமயத்தில் ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்பவர்கள் பயண டிக்கெட் காட்டினாலே போதும். காவல்துறை அனுமதிப்பார்கள். சென்னை மக்கள் இரவு முழு ஊரடங்கிற்கும் முழு ஊரடங்கிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை" என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
