‘சொல்ல வார்த்தையே வரல’!.. காரை பரிசாக வாங்க அம்மாவையும், அண்ணனையும் அனுப்பிய இளம்வீரர்.. இன்ஸ்டாகிராமில் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தார் SUV கார் பரிசாக அளித்தது குறித்து இளம்வீரர் முகமது சிராஜ் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதில் தனது மனைவியின் பிரசவ காலத்தில் உடன் இருக்க வேண்டும் எனக் கூறி, முதல் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பினார். இதனை அடுத்து ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.
அப்போது முன்னணி வீரர்கள் சிலர் அடுத்தடுத்து காயங்களால் வெளியேற, இளம்வீரர்களை கொண்டு ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் வாசிங்டன் சுந்தர், நடராஜன், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இவர்களது அபார பங்களிப்பால் இந்திய அணி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.
இளம் மற்றும் அறிமுக வீரர்களை கொண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வென்ற இந்த டெஸ்ட் தொடர், இந்திய அணிக்கு மிக முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் இதனை வரலாற்று வெற்றி என பாராட்டியிருந்தனர்.
அதேபோல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இளம்வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான 6 இந்திய வீரர்களுக்கு புதிய காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தார். அதன்படியே வாசிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூருக்கு தார் SUV கார் பரிசாக வழங்கப்பட்டது. இதில் தனக்கு பரிசாக வந்த காரை, தனது பயிற்சியாளரும், நலம் விரும்பியுமான ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு பரிசாக கொடுத்து நடராஜன் அழகு பார்த்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு மஹிந்திராவின் தார் SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணனும், தாயாரும் சென்று பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முகமது சிராஜ், ‘இந்த தருணத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை அல்லது உங்களது அழகான பரிசை பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியவில்லை. இதற்காக ஆனந்த் மஹிந்திரா சாருக்கு பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராதவிதமாக இந்த காரை வாங்க நான் வரமுடியவில்லை. என் அம்மாவும், என் அண்ணனும் அதை பெற்றுக்கொண்டனர்’ என பதிவிட்டுள்ளார். தற்போது ஐபிஎல் தொடருக்காக பெங்களூரு அணியுடன் சிராஜ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது முகமது சிராஜின் தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். ஆனால் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து டெஸ்ட் தொடரை வென்றதும், இதை மறைந்த தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக சிராஜ் உருக்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
