"இனி அவருக்கு 'சான்ஸ்' கெடைக்குறது 'கஷ்டம்' தான் போல..." 'இளம்' வீரருக்கு வைக்கப்படும் 'செக்'??... 'காரணம்' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒரு நாள் போட்டி, 3 டி 20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ரிஷப் பண்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கிய நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து அசத்தியிருந்தார். அதன்பிறகு, அவருக்கு டி 20 அணியில் இடம் கிடைத்தது. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், பின்னர் பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் சொதப்ப ஆரம்பித்தார்.
தோனியை போல ஆட முயன்றது தான் அவரது மோசமான ஆட்டத்திற்கு காரணம் என பலர் ரிஷபை விமர்சனம் செய்தனர். அதே போல தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பண்ட் பெரிதாக ஜொலிக்கவில்லை. அவரை விட சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், சஹா ஆகிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர்.
இதன் காரணமாக, ரிஷபிற்கு டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்தது. அவரது உடல் எடை காரணமாக தான் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி அணியில் இடம் கிடைக்கவில்லை என்றொரு கருத்து பரவலாக இருந்து வருகிறது. இப்போது டெஸ்ட் அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் இருப்பாரா என்ற கேள்வி தான் அதிகம் எழுந்துள்ளது.
அதற்கு காரணம், டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் சஹா, ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றின் போது காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வரும் சஹா தற்போது பேட்டிங் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சஹா சிறப்பாக ஆடியுள்ள நிலையில், அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. அப்படி கிடைத்த வாய்ப்பை சஹா சரியாக பயன்படுத்தாமல் போனால் தான் ரிஷப்பிற்கு அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கலாம்.
ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் டெஸ்ட் அணியில் மட்டுமே அவர் தேர்வாகியுள்ள நிலையில், இனிவரும் சர்வதேச தொடர்களில், இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறுமா என்பது ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.