'4-வதா இறங்குனதுக்கு இப்படி திட்டுறீங்க'... 'ஆனா அதுக்கு காரணம் இருக்கு'... மனம் திறந்த கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தான் ஏன் நான்காவது இடத்தில் களமிறங்குனேன் என்பதற்கு, இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், முதலில் பீல்டிங்யை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் ஃபிஞ்ச் (110), வார்னர் (128) ஆகியோர் சதம் விளாசி அசத்தினார்கள். முன்னதாக தவன், ரோஹித் துவக்க வீரர்களாக களமிறங்க ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்கினார். இதனால் கேப்டன் கோலி நான்காவது வீரராக களமிறங்கினார்.
ஆனால் இந்த முடிவு நேற்று கைகொடுக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோலி ஏன் இதுபோன்ற தவறான முடிவை எடுத்தார் என ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்கள். இந்த நிலையில் தான் எதற்காக நான்காவது இடத்தில் களமிறங்கினேன் என்பதற்கு கோலி விளக்கமளித்துள்ளார். அதில், ''நான்காவது வீரராக களமிறங்குவது என்பது ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்று தான்.
மேலும் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை அணியில் இணைக்கவும், வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவும் இது சோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் எதையும் முயற்சி செய்து பார்த்தால் மட்டுமே அதன் பலன் தெரியும். எனவே ரசிகர்கள் நேற்றைய போட்டியின் முடிவை மட்டும் வைத்து அச்சப்பட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.