'நெருக்கடிக்கு மேல் நெருக்கடி'!.. ரத்தாகிறதா இந்தியா - இலங்கை தொடர்?.. உச்சகட்ட பரபரப்பில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுடனான தொடருக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இலங்கை அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்த போட்டிகள் நடைபெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி கடந்த 6ம் தேதியன்று தான் நாடு திரும்பியது. ஆனால், அந்த தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை திரும்பியுள்ள அந்நாட்டு வீரர்கள் அனைவரும் உடனடியாக குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. முடிவுகளுக்காக இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் மற்றும் ஊழியர் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வீரரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என இலங்கை வாரியம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இலங்கை வீரர்கள் வரும் ஜூலை 12ம் தேதி வரை பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பரிசோதனை தான் முடிந்துள்ளது என்பதால் மீண்டும் இன்று மாலை 2ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக்கூறப்படுகிறது. இதன் முடிவுகளிலும் பாசிட்டீவ் என வந்தால் இந்தியா - இலங்கை தொடர் ரத்தாவதற்கு வாய்ப்புள்ளது.

மற்ற செய்திகள்
