டிக்ளேர் செய்வதற்கு முன்னாடி ரோஹித்துக்கு மெசேஜ் அனுப்பிய ஜடேஜா..ஓஹோ இதுதான் விஷயமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது. விராட் கோலியின் 100 வது டெஸ்ட் இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது இந்த டெஸ்ட்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடி காட்டினர். தனது 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் அடுத்து வந்த ரிஷப் பண்ட், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது அபார ஆட்டம் காரணமாக இந்தியா இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ரோஹித்தின் அதிர்ச்சி தந்த முடிவு
களத்தில் இறங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஜடேஜா 175 ரன்களை எடுத்து இருந்த நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சச்சின் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பாகவே அப்போதைய கேப்டன் ட்ராவிட் டிக்ளேர் செய்ததாகவும் அதேபோல, இப்போது ரோஹித்தும் செய்து இருக்கிறார் எனவும் பலவேறு கருத்துக்களை ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், ஆட்ட நேர முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஜடேஜா இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
என்னுடைய முடிவு
நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் ஜடேஜா. அப்போது இந்த டிக்ளேர் முடிவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை பற்றி பேசிய ஜடேஜா," 200 ரன்கள் எடுத்தபிறகு டிக்ளேர் செய்யுமாறு குல்தீப் யாதவிடம் சொல்லி அனுப்பினார் ரோஹித். இலங்கை வீரர்கள் அனைவரும் சோர்வுடன் காணப்பட்டதால், அவர்கள் பேட்டிங் செய்யும் போது எளிதில் விக்கெட்களை வீழ்த்தலாம். இதனால் நான்தான் இன்னிங்சை டிக்ளேர் செய்யும் படி அணி நிர்வாகத்திடம் கூறினேன்" என்றார்.
தனிப்பட்ட சாதனையை விடுத்து அணியின் நலன் குறித்து சிந்தித்த ஜடேஜாவை சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.