‘என்னைப் பொறுத்தவரை கோலி தோல்வி கேப்டன்தான்’!.. ஏன் இப்படி..? வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய முன்னாள் கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் ஐபிஎல் (IPL) தொடர் 14-வது சீசனின் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நடந்து முடிந்த முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் (Michael Vaughan), விராட் கோலியை (Virat Kohli) கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. அதற்காக தோல்வி கேப்டன் என்று அவரை நான் கூறவில்லை. ஆனால் கோலி தன்னையே உற்றுநோக்கி பார்த்தால் ஆர்சிபி அணியில் தான் ஒரு தோல்வி கேப்டன் என்பதை ஒப்புக்கொள்வார். ஒரு ஆக்ரோஷமான கேப்டன் கையில் கோப்பை இல்லாதது வருத்தமான விஷயம்தான்.
ஆனால் இந்திய அணியை வழிநடத்தும் போது டெஸ்ட், ஒருநாள், டி20 என அபாரமான கேப்டனாக இருக்கிறார். ஆனால் ஆர்சிபி அணியில் அந்த உயரத்தை கோலி அடையவில்லை. ஏபிடி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், கே.எஸ்.பரத் போன்ற வீரர்களை பேட்டிங்கிலும், சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களை பவுலிங்கிலும் வைத்துக்கொண்டு கோப்பையை வெல்லாதது என்னைப் பொறுத்தவரை தோல்விதான்’ என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதுவரை 3 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கும், ஒரு முறை இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில் நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.