‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 16, 2019 10:46 AM
இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் யாரும் பண்ணாத புதிய சாதனையை படைத்து விராட் கோலி வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லெவிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர். இதில் கிறிஸ் கெய்ல் 41 பந்துகளில் 72 ரன்களும், எவின் லெவிஸ் 29 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். போட்டின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனை அடுத்து 35 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 256 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 114 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். இத்தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மூன்று வடிவிலான( டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட் போட்டிகளும் சேர்த்து 20,502 ரன்களை எடுத்து விராட் கோலி அசத்தினார். விளையாட துவங்கிய பத்து வருடங்களில் 20,000 ரன்களை கடந்த ஒரே சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற புதிய வரலாற்றை விராட் கோலி படைத்துள்ளார். கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், டான் ப்ராட்மேன் போன்ற வீரர்கள் கூட இந்த சாதனையை படைக்காதது குறிப்பிடத்தக்கது.