இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் தம்பதியர் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் விராட் கோலி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்களது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குழந்தைக்கு 'வாமிகா' என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 'தங்களது குழந்தை தங்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், தூக்கங்கள் தொலைந்தாலும் தங்களது இதயங்கள் நிறைந்துள்ளதாகவும்' அனுஷ்கா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் கமெண்ட் செய்த விராட் கோலி, 'எனது மொத்த உலகமும் ஒரே புகைப்படத்தில் உள்ளது' என தெரிவித்துள்ளார். அனுஷ்கா ஷர்மாவின் பதிவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்த புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
