'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்?!!'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்!'... 'கனவு நிஜமான வைரல் தருணம்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரர் நடராஜன் இந்திய வீரர்களுடனான வலைப் பயிற்சியில் முதல்முறையாக பந்து வீசும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் டி நடராஜன் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டார். அந்த தொடரில் அனைவரையும் மிரள வைத்த அவருடைய யார்க்கர் பந்துவீச்சை சந்திக்க சர்வதேச வீரர்களே திணறினர். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழ, பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு அவருக்கு முதலில் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள மூன்று இந்திய அணிகளில் எதிலும் அவருக்கு இடம் கிடைக்காத நிலையில், அணியில் கூடுதல் பந்துவீச்சாளராக பயிற்சியின் போது மட்டும் பந்துவீசும் வாய்ப்பை அவர் பெற்றார்.
அதன் பின்னரே முன்னதாக டி20 அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட, அவருக்கு பதிலாக நடராஜன் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் அவருக்கு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் முடிவைப் பொறுத்தே போட்டியில் அவர் பங்கேற்க முடியும். ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் நடராஜனுடன் பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர் என ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ள சூழலில், இவர்களில் மூவருக்கு மட்டுமே ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் அனுபவ வீரர்களை தாண்டி நடராஜன் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவது கடினம் என்று கருதப்படும் நிலையில் தான் நடராஜன் இந்திய வீரர்களுடன் வலைப் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன் அவர் தன் முக்கிய திறமையான யார்க்கரை பயன்படுத்தியுள்ளார். முன்னர் ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் ஆறு யார்க்கர் வீசி அவர் அனைவரையும் மிரள வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
வலைப் பயிற்சியில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நடராஜனின் பந்துவீச்சை கவனித்து வருவதால் டி20 போட்டிகளில் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நடராஜன் அணியில் இடம் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் வலைப் பயிற்சியில் வார்னரை ஈர்த்து ஹைதராபாத் அணியில் இடம் பெற்றது போலவே விராட் கோலியை ஈர்த்து நடராஜன் இந்திய அணியிலும் இடம் பெறலாமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
We have seen him bowl with a lot of success in the @IPL and here is @Natarajan_91 bowling in the #TeamIndia nets for the first time after his maiden India call-up! A dream come true moment. 👏 pic.twitter.com/WqrPI0Ab7I
— BCCI (@BCCI) November 15, 2020