'இத கேட்கும் போதே மனசு பதறுதே'... 'பறிபோன வேலை'... 'பிள்ளைகளுக்கும் இத தான் சாப்பிட கொடுக்கிறோம்'... அதிரவைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்நாம் எப்போது எல்லாம் துன்பத்தில் இருக்கிறோமோ அப்போது எல்லாம், கண்ணதாசனின் வரிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று பலரும் கூறுவது உண்டு. அதாவது 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு'. அந்த வரிகளை நினைவு படுத்தும் வகையில் நெஞ்சை ரணமாக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இலக்கிற்கு எந்த நாடும் தப்பவில்லை. அந்த வகையில் மியான்மர் நாடும் கொரோனாவிற்கு இலக்கானது. அங்குக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலிலிருந்து வரும் நிலையில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மியான்மர் உள்ளது.
ஒரு பக்கம் ஊரடங்கு மறுபக்கம் பசி கொடுமை என மியான்மர் மக்கள் தவித்து வந்த நிலையில், முதலில் வீட்டிலிருந்த பாத்திரங்களை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தில் தங்களுக்கும் தங்களின் பிள்ளைகளுக்கும் உணவு சமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் ஊரடங்கு முடிவுக்கு வராத நிலையில், வீட்டிலிருந்த பொருட்களும் காலியான நிலையில் குழந்தைகள் பசியால் கதறித் துடித்தார்கள். மியான்மர் நாட்டில் கிராமத்தில் உள்ள மக்கள் ஊர்வன, எலி மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்வது வழக்கம். ஆனால் மியான்மர் நாட்டின் ரங்கூன் போன்ற புகழ்பெற்ற நகரத்தில் வசிக்கும் மக்கள் இவற்றை உணவாக உட்கொண்டு பழக்கம் இல்லை.
ஆனால் வீட்டில் நிலவும் பசி கொடுமை காரணமாக வேறு வழி இல்லாமல் பாம்பு, எலி போன்றவற்றைச் சமைத்து தங்களின் குழந்தைகளின் பசியைப் போக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். நகரத்தில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வேலையை இழந்துள்ள நிலையில், பிள்ளைகளின் பசியைப் போக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்கள். அங்குள்ள அதிகாரிகளால் வெறும் 40 சதவீத மக்களுக்கு மட்டுமே உதவ முடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே மியான்மர் அரசு வழங்கும் 15 டாலர் உதவித் தொகையும், ஒரு வேளை உணவும் போதுமானதாக இல்லை என மக்கள் பெரும் விரக்தியில் உள்ளார்கள். இந்த செய்தியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ''ஊரடங்கால் எங்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை நினைத்து தினமும் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் 3 வேளை உணவும், இருக்க இடமும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கும் போது நமது பிரச்சனை எல்லாம் ஒன்றுமே இல்ல என நினைக்கத் தோன்றுகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்கள்.