இந்த நாள் இவ்ளோ ‘ஸ்பெஷலா’ இருக்கப் போகுதுன்னு அப்போ யாருக்கும் தெரியாது.. கொண்டாடும் ‘தல’ தோனி ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் போட்டியில் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து விளையாடிய போட்டிகளிலும் தோனி தொடர்ந்து சொதப்பினார். அதனால் இனி தோனி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.
இதனை அடுத்து 2005-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி தனது முதல் சதத்தை (148 ரன்கள்) பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் தோனி அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதன் விளைவு அதிவிரைவாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை தோனி படைத்தார்.
இந்த சூழலில் 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் மிகப்பெரிய தொடரை தோனி சந்தித்தார். அப்போது தோனியின் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லாது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
அதேபோல் 1983-ம் ஆண்டு பிறகு ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லவில்லை. அந்த கனவை 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று நிறைவேற்றியது. இதனை அடுத்து 2013-ம் ஆண்டு நடந்த ஐசிசி சம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்தியா வென்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றுடன் கிரிக்கெட் உலகிற்கு தோனி அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆவதால் ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
