‘அப்பா, உங்களை பெருமைப்பட வச்சிட்டேன்’!.. மேட்ச் ஜெயிச்சதும் ‘க்ருணால் பாண்ட்யா’ போட்ட உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா தனது தந்தை குறித்து ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்கள் எடுத்து, 2 ரன்னில் சதத்தை நழுவ விட்டார்.
இதனை அடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியைப் பொறுத்தவரை அறிமுக இளம்வீரர் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்ட்யா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அணியின் இக்கட்டான இறுதி நேரத்தில், அறிமுக வீரர் க்ருணால் பாண்ட்யா 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அறிமுக போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். போட்டி முடிந்த பின் அளித்த பேட்டியில் பேசிய முடியாமல், தனது மறைந்த தந்தையை நினைத்து க்ருணால் பாண்ட்யா கண் கலங்கினார்.
Papa, with every ball you were always on my mind and in my heart. Tears rolled down my face as I felt your presence with me. Thank you for being my strength, for being the biggest support I’ve had. I hope I made you proud. This is for you Papa, everything we do is for you Papa ❤️ pic.twitter.com/djQWaytETG
— Krunal Pandya (@krunalpandya24) March 23, 2021
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தனது தந்தை குறித்து ட்விட்டரில் க்ருணால் பாண்ட்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘அப்பா நான் சந்தித்த ஒவ்வொரு பந்தின் போதும், நீங்கள் என்னுடனேயே இருந்தீர்கள். என்னுடைய மனதிலும், இதயத்திலும் நீங்கள் இருப்பதை உணர்ந்ததால்தான் என் கண்களில் நீர் பெருகியது. இந்த போட்டியின்போது ஒவ்வொரு பந்திலும் எனக்குப் பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் நான் உங்களை பெருமைப்படுத்தி உள்ளதாக நம்புகிறேன். நான் செய்யும் எல்லாமும் உங்களுக்காகதான் அப்பா’ என க்ருணால் பாண்ட்யா பதிவிட்டுள்ளார். இவரின் தந்தை கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.