'சாஹல் கிட்ட அப்படி என்ன குறை கண்டுபுடிச்சீங்க'?.. 'எதுக்காக அவர டி20 உலகக்கோப்பைல நிராகரிச்சீங்க'?.. மௌனம் கலைத்த பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் யுவேந்திர சாஹல் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் பேட்டிங்கில் ஓரளவுக்கு அனைவரும் எதிர்பார்த்தபடியே அணி தேர்வு இருந்த போதும், பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நீண்ட நாட்களாக டி20 போட்டியில் சேர்க்கப்படாமல் இருந்த அஷ்வின், உலகக்கோப்பை அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2017ம் ஆண்டு தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்கேற்றிருந்தார். அஷ்வினுடன் சேர்த்து ஜடேஜாவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு அடுத்தபடியாக ராகுல் சஹார், அக்ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், மிகப்பெரிய ட்விஸ்டாக நட்சத்திர ஸ்பின்னர்களான யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த அஷ்வின் - ஜடேஜா ஆகியோரை ஓரம்கட்டிவிட்டு அவர்களுக்கு பதிலாகத்தான் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் கொண்டு வரப்பட்டனர்.
தொடக்க காலங்களில் இவர்களின் ரிஸ்ட் ஸ்பின்னிங்கிற்கு நல்ல பலன்கள் கிடைத்தது. ஆனால், போக போக இவர்களின் நுணுக்கங்களை புரிந்துக்கொண்ட பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்கவிடுகின்றனர். இதனால் குல்தீப் யாதவ் கடந்த சில போட்டிகளில் ஒதுக்கப்பட்டுவிட்டார். எனினும், ஆர்சிபி அணியில் விராட் கோலியின் நம்பிக்கைக்குரிய பவுலராக விளங்கும் சாஹல் தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாடி வந்தார். இந்த சூழலில் அவரும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து சாஹல் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், "சாஹலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அமீரக களத்தில் வேகமாக பந்துவீசும் ஸ்பின்னர்கள் தான் தேவை. இதனால் தான் ராகுல் சாஹருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
