அடேங்கப்பா..! அஸ்வினை டி20 உலகக்கோப்பைக்கு செலக்ட் பண்ணதுக்கு காரணம் இதுதானா.. மாஸ்டர் ப்ளான் போட்டிருக்கும் இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் விளக்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் தமிழக முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுகிறார்.
அஸ்வினை தேர்வு செய்தது குறித்து தெரிவித்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, ‘டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. அதற்கு காரணம், முன்பு நடந்த ஐபிஎல் தொடரின்போது ஐக்கிய அரபு அமீர மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஃப் ஸ்பின்னருக்கு மைதானம் நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறது.
அதனால் இந்திய அணிக்கு அனுபவ வீரர் ஒருவர் தேவை. வாசிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட் அஸ்வின் மட்டும்தான். அவர் இந்திய அணியின் சொத்து. அஸ்வின் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். துபாய் மைதானம் மிகப்பெரியதாக இருக்கும். அங்கு அனைத்து அணிகளுக்கும் பவர்ப்ளேவில் தொந்தரவு அளிக்கும் வகையில் அஸ்வின் பந்துவீசக் கூடியவர்’ என சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் ஒன்றில் கூட அஸ்வின் விளையாடவில்லை. இந்த நிலையில் நாளை (10.09.2021) நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.