‘அவங்க தப்பு செஞ்சு தண்டனை அனுபவிச்சிருக்காங்க.. எப்படி இதை நீங்க பண்ணலாம்?’!.. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பரபரப்பை கிளப்பிய விவகாரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு ஸ்டீவன் ஸ்மித்தை துணைக் கேப்டனாக நியமித்ததற்கு இயன் சேப்பல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தாமாக முன்வந்து தனது கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் தற்காலிகமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலக இருப்பதாகவும் டிம் பெயின் அறிவித்தார்.
இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். மேலும் துணைக் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஸ்டீவன் ஸ்மித்தை துணைக் கேப்டனாக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக, அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் கேப்டன் பதவியில் இருந்தும் ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஸ்டீவன் ஸ்மித்திற்கு துணைக் கேப்டன் பதவி கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘கேப்டன் பதவிக்கு பேட் கம்மின்ஸ் நல்ல தேர்வு, அவரிடம் நல்ல அனுபவம் உள்ளது. ஆனால் ஸ்டீவன் ஸ்மித்துக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தும்.
ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் தவறு செய்து தண்டனை அனுபவித்தவர்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் தவறு எப்போதும் தவறுதான். அவருக்கு துணைக் கேப்டன் பதவி கொடுத்திருப்பது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும்’ என இயன் சேப்பல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயன் சேப்பலின் இந்த கருத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
