"இதுக்கு பேரு கேப்டன்சியா??.." இரண்டே ஓவரில் மாறிய மேட்ச்.. ராகுல் முடிவால் கடுப்பான ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், தங்களின் முதல் போட்டியில் நேற்று மாறி மாறி மோதிக் கொண்டன.

இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து, பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, இறுதி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றியுடன் தங்களின் ஐபிஎல் பயணத்தை தொடங்கியுள்ளது.
வெற்றி பெற வாய்ப்பு
இன்னொரு பக்கம், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் அதனை கோட்டை விட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக ராகுல் எடுத்த முடிவுகள் பார்க்கப்படுகிறது. குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது.
ராகுல் எடுத்த முடிவு
இதனையடுத்து, 16 ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் தீபக் ஹுடாவிடம் கொடுத்தார் ராகுல். இந்த ஓவரில் மொத்தம் 22 ரன்களை குஜராத் அணி அடித்தது. மீண்டும், ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு ஓவரை ராகுல் கொடுக்க, அந்த ஓவரிலும் 17 ரன்களை குஜராத் அணி எடுத்தது. இதன் பிறகு, அடுத்தடுத்து ஓவர்களில், ரன்களை எளிதாக எடுத்து, வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி.
அது மட்டுமில்லாமல், சிறப்பாக பந்து வீசி, இரண்டு விக்கெட்டுகள் எடுத்த சமீராவிற்கு ஒரு ஓவர் மீதமிருந்ததும் அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், ராகுலின் கேப்டன்சி குறித்து பல விதமான கருத்துக்களை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நான்காவது ஓவரை வீசவில்லை
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ராகுலின் கேப்டன்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "கே எல் ராகுலின் கேப்டன்சியில் ஒரு சிறிய கேள்வி உள்ளது. ஏனென்றால், நேற்றைய போட்டியில் சிறந்த பவுலராக திகழ்ந்த சமீராவிற்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. தன்னுடைய முதல் இரண்டு ஓவர்களில், இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் அவர் எடுத்திருந்தார். அப்படிப்பட்ட ஒருவர், நான்காவது ஓவரை வீசவில்லை.
கணக்குல தப்பு இருக்கே..
தீபக் ஹூடா ஒரே ஓவரில், 22 ரன்களைக் கொடுத்தார். அப்படி இருக்கும் போது, 17 ஆவது ஓவரை ரவி பிஷ்னோய்க்கு ராகுல் கொடுத்தார். சமீரா மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவருக்கும் தலா இரண்டு ஓவர்கள் மீதம் இருந்தது. இதனால், 17 ஆவது ஓவரை ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால், சுழற்பந்து வீச்சாளர் ஓவரில் ரன்கள் சென்ற பிறகு, மீண்டும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கிறீர்கள். உங்கள் கணக்கில் பிழை உள்ளது" என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
