விளையாடுறதா வேணாமான்னு ‘இவங்க’தான் முடிவு பண்ணுவாங்களாம்!- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்குமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் பங்கேற்குமா என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்துள்ளது.
ஐசிசி நேற்று 2024-ம் ஆண்டு முதல் 2031-ம் ஆண்டு வரையிலான வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வருகிற 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அனுராக் தாக்கூர் கூறுகையில், “அந்த நேரத்தில் இந்திய அரசும் உள்துறை அமைச்சகமும் சேர்ந்து தகுந்த முடிவை எடுக்கும். சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் அனைத்து வகையான காரணிகளையும் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுப்போம். இதற்கு முன்பும் கூட பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருதி பலரும் அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே? இதற்கு முன்னர் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதே தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் ஆக உள்ளது. இதை ஆராய்ந்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
ஐசிசி அறிவித்துள்ளதன் அடிப்படையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் 8 அணிகள் 15 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தான் ஏற்று 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஓவலில் நடந்த போட்டியில் இந்தியாவை 180 ரன்களுக்கு பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.
ஐசிசி-யில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் 11 முழு நேர உறுப்பினர்கள் மற்றும் 3 துணை உறுப்பினர்கள் 2 ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும், 4 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தவும், 2 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.