முன்ன மாதிரி 'இந்தியா-பாகிஸ்தான்' மேட்ச் நடக்க 'சான்ஸ்' இருக்கா...? உண்மையான 'நிலைமை' என்ன...? - ஓப்பனாக சொன்ன கங்குலி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவேண்டும் என பிசிசிஐ மட்டும் முடிவெடுத்தால் போதாது என பிசிசிஐ., தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களிடையே மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட் தொடர் போட்டிகள் அதிகமாக பார்த்து ரசிக்கப்படும் விளையாட்டாக உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு கூட அவ்வளவு ரசிகர்கள் இருக்கமாட்டார்கள்.
ஆனால், இந்த ரசனை மிகுந்த கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றால் அங்கு பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். கிரிக்கெட் தொடர் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போது இது பல்வேறு அரசியல் பிரச்சனைகளையும் தூண்டி விடும்.
இதன் காரணமாகவே கடந்த பல வருடங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எந்த கிரிக்கெட் தொடரும் நடைபெறவே இல்லை. ஆனால், ஐசிசி-யால் நடத்தப்படும் தொடர்களில் மட்டும் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டி என கூறபட்டுள்ளது.
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான நேரடி தொடர்கள் மீண்டும் பழையபடி நடத்தப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இதற்கான எந்த சாத்தியக்கூறுக்களும் இல்லை என பிசிசிஐயின் சேர்மன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், 'இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவேண்டும் என பிசிசிஐ தலைவரான நானும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக தலைவரான ரமீஷ் ராஜா ஆகிய இருவரும் முடிவெடுத்தால் மட்டும் போதாது.
அப்படியே நாங்க ஆசைப்பட்டாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று விடாது. இதற்கு இரு நாடுகளும் ஒருமனதோடு சம்மதிக்க வேண்டும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இருநாடுகளின் அரசியலுக்கு உட்பட்டதாகும்' என்று கங்குலி கூறியுள்ளார்.