'பட் அவரோட ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு': தொடரும் விராட் கோலி- சவுரவ் கங்குலி மோதல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு"விராட் கோலியின் ஆட்டிட்யூட் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது எல்லாம் ரொம்ப சண்டை போடுகிறார்" என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியைத் தூக்கியதில் இருந்து தொடர்ந்து கங்குலி- கோலி மோதல் தொடர் கதையாகி உள்ளது.
தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் தான் விராட் கோலி, கேப்டனாக பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ- யின் இந்த முடிவு மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி, ‘டி20 கேப்டன்ஸி பொறுப்பை விட்டுத் தர வேண்டாம் என்று விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். அவர் அதை கேட்க விரும்பவில்லை.
டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு தனித் தனி கேப்டன்கள் இருக்க வேண்டாம் என்ற நோக்கில் தான் ரோகித் சர்மா பொதுவான கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்’ என்று விளக்கம் கொடுத்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த கோலி, ‘என்னிடம் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவது குறித்து, அறிவிப்பு வெளியாகும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னால் தான் தெரியப்படுத்தினார்கள். யாரும் என்னிடம் இது குறித்துப் பேசி விவாதிக்கவில்லை’ என்று கூறினார்.
கங்குலி சொல்லிய கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்தை விராட் கோலி தெரிவித்தது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சூழலில் குர்கானில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, "எனக்கு விராட் கோலியின் ஆட்டிட்யூட் மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் இப்போது எல்லாம் அதிகமாக சண்டை போடுகிறார். என் வாழ்க்கையில் மன அழுத்தம் என்பதே கிடையாது. அது மனைவியாலும் அல்லது பெண் தோழியாலும் தான் வரும். இந்த சர்ச்சைகளை எல்லாம் பிசிசிஐ-யிடம் விட்டுவிடுங்கள். அனைத்தையும் பிசிசிஐ பார்த்துக்கொள்ளும்" எனக் கூறியுள்ளார்.