தொடர் தோல்வி.. ‘பேசாம டிராவிட்டையே பயிற்சியாளர் ஆக்கிருங்க’.. வலுக்கும் கோரிக்கை.. முன்னாள் ‘கேப்டன்’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக எழுந்த கேள்விக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. அதில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனால் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனிடையே ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து தொடரில் கலந்து கொண்டுள்ளார். அதனால் இலங்கை தொடருக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட்டை இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ‘முதலில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியட்டும். அதன்பின்னர்தான் நம்முடைய புதிய அணி எப்படி இருக்கிறது? எப்படி விளையாடுகிறது என்பது தெரிய வரும். புதிய பயிற்சியாளரை நியமிப்பது சரியான ஒன்றுதான். அதேவேளையில், ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரை தற்போது நீக்க எந்த அவசியமும் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கபில் தேவ், ‘சில தோல்விகளால் எழும் விமர்சனங்கள் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். தற்போதுள்ள இந்திய அணியில் திறமையான நிறைய வீரர்கள் உள்ளனர். ஒருவர் போனால், அந்த இடத்தை நிரப்ப அடுத்தடுத்து வீரர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். இதுதான் நம் அணியின் பலம். அதனால் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து மற்றும் இலங்கை தொடரை நம்மால் நிச்சயம் வெல்ல முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.